1. உயிரீறு மெய்யீறுகளின் பொதுப்புணர்ச்சி

வருமொழி இயல்பாதல்

145.ஞ ந ம ய வ வெனும் முதலாகு மொழியும்
உயிர்முத லாகிய மொழியும் உளப்பட
அன்றி யனைத்தும் எல்லா வழியும்
நின்ற சொன்முன் இயல்பா கும்மே.

இஃது, இருபத்துநான்கு ஈற்றின் முன்னும், வன்கணமொழிந்த கணங்கட்கு இரு வழியும் வருமொழி முடிபு கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) ஞ ந ம ய வ எனும் முதல் ஆகுமொழியும், ஞ ந ம ய வ என்று சொல்லப்படும் முதலெழுத்து உளவாகும் மொழியும் , உயிர்முதலாகிய மொழியும் உளப்பட - உயிர்முதலாகிய மொழியுமாக, அன்றி அனைத்தும் எல்லா வழியும் - அவ்வனைத்து மொழியும் அல்வழியும் வேற்றுமையுமாகிய எல்லா விடத்தும், நின்ற சொல்முன் இயல்பாகும் - இருபத்துநான்கு ஈற்றுப்பெயராகிய நிலைமொழிமுன்னர் இயல்பாகி முடியும்.

ஈண்டு உளப்படவென்பது ஆகவென்னும் பொருண்மைத்து.

எ - டு: விள, தாழ் என நிறுத்தி ஞான்றது, நீண்டது, மாண்டது, யாது, வலிது, அடைந்தது, ஆடிற்று, இடிந்தது, ஈரிற்று, உடைந்தது, ஊறிற்று, எழுந்தது, ஏறிற்று, ஐது, ஒடிந்தது,ஓடிற்று, ஒளவியத்தது, நுந்தையது, எனவும்; ஞாற்சி, நீட்சி, மாட்சி, யாப்பு, வலிமை, அடைவு, ஆட்டம், இடிபு, ஈட்டம், உடைபு ஊற்றம், எழு, ஏணி, ஐயம், ஒடுக்கம், ஓக்கம், ஒளவியம் நுந்தை எனவும் ஒட்டிக் கொள்க.

'எல்லாம்' என்றதனான், ஒற்றிரட்டலும், உடம்படுமெய் கோடலும், உயிரேறி முடிதலும் என வரும் இக்கருவித்திரிபு (மூன்று திரிபும் அன்மையின்) திரிபெனப் படா வென்பது கொள்க. இஃது இருபத்து நான்கு ஈற்றிற்கும் அல்வழியினும் வேற்றுமையினும், அகத்தோத்தினுள் நாற்பத்தெட்டுச் சூத்திரத்தான் முடிவதனை ஈண்டு ஒரு சூத்திரத்தான் தொகுத்து முடித்ததாயிற்று. மேலும் இவ்வாறே தொகுத்து முடிக்கின்றவாறு அறிக.

(2)