1. உயிரீறு மெய்யீறுகளின் பொதுப்புணர்ச்சி

எழுத்ததிகாரம்

146.அவற்றுள்
மெல்லெழுத் தியற்கை யுறழினும் வரையார்
சொல்லிய தொடர்மொழி யிறுதி யான.

இஃது, , மேற்கூறிய முடிபிற் சிலவற்றிற்கு அம் முடிபு விலக்கிப் பிறிது விதி எய்துவித்தல் நுதலிற்று.

(இ-ள்) அவற்றுள் - மேற்சொல்லப்பட்ட மூன்று கணத்தினும் , மெல்லெழுத்து இயற்கை உறழினும் வரையார் - மெல்லெழுத்தினது இயல்பு இயல்பாதலே யன்றி உறழ்ந்து முடியினும் நீக்கார் , சொல்லிய தொடர்மொழி இறுதியான- சொல்லப்பட்ட தொடர்மொழி ஈற்றுக்கண்.

எ - டு: கதிர்ஞெரி , கதிர்ஞ்ஞெரி, நுனி, முரி என வரும் .

வருமொழி முதற்கூறியவதனால் ஓரெழுத்தொருமொழியுள்ளும் ஈரெழுத்தொரு மொழியுள்ளும் சிலவற்றிற்கு உறழ்ச்சி முடிபு கொள்க.

எ - டு: பூஞெரி , பூஞ்ஞெரி , நுனி, முரி எனவும் ; காய்ஞெரி , காய்ஞ்ஞெரி , நுனி, முரி எனவும் வரும்.

'சொல்லிய' என்றதனான் ஓரெழுத்தொரு மொழியுள்ளும் சிலவற்றிற்கு மிக்கு முடிதல் கொள்க.

கைஞ்ஞெரித்தார் , நீட்டினார்,முறித்தார் , எனவும் , மெய்ஞ்ஞானம் மெய்ந்நூல் , மெய்ம்மறந்தார் எனவும் வரும் .

(3)