இஃது, யகர ஞகரங்கள் முதலாம்வழி நிகழ்வதோர் கருவி கூறுதல் நுதலிற்று.
(இ-ள்) ண ன என் புள்ளிமுன் - ண ன என்று சொல்லப்படும் புள்ளிகளின் முன் , யாவும் ஞாவும் வினை ஓர் அனைய என்மனார் புலவர் - யாவும் ஞாவும் வினைச்சொற்கள் முதலாதற்கு ஒரு தன்மைய வென்று சொல்லுவர் புலவர். எ - டு: மண்யாத்த எனவும் , பொன்யாத்த எனவும் , மண்ஞாத்த எனவும் , பொன்ஞாத்த எனவும் வரும் . ஞா முற்கூறாது யா முற்கூறியவதனான் , யா முதன்மொழிக்கண் ஞா வருமென்று கொள்க1. (4)
1. மண் ஞான்றது என்றவழி மண் யான்றது என்று வாராமை உணர்க . (நச்)
|