இஃது , ணகாரவீற்றிற்கும் னகாரவீற்றிற்கும் அல்வழிக்கண் நிலைமொழிமுடிபு கூறுதல் நுதலிற்று.
(இ-ள்) மொழிமுதல் ஆகும் எல்லா எழுத்தும் வருவழி - மொழிக்கு முதலாமென்று சொல்லப்பட்ட இருபத்திரண்டெழுத்தும் வருமிடத்து , நின்ற அ இரு புள்ளியும் வேற்றுமை அல்வழி திரிபு இடன் இல் - மேற்சொல்லினின்ற ண னக்களாகிய அவ்விருபுள்ளியும் வேற்றுமையல்லாத அல்வழியிடத்துத் திரியும் இடம் இல. எ - டு: மண் , பொன் என நிறுத்தி, கடிது, சிறிது, தீது, பெரிது என வன்கணத்தோடு ஒட்டுக. பிற கணத்துக்கண்ணும் அவ்வாறே ஒட்டுக. வருமொழிமுதற் கூறியவதனால் , ணகாரத்திற்குச் சிறு பான்மை திரிபும் உண்டெனக் கொள்க . அது சாட்கோல் என வரும். (5)
|