2. உயிரீறு மெய்யீறுகளின் சிறப்புப் புணர்ச்சி

முன்னிலை வினைச்சொல் முடியுமாறு

152.உயிரீ றாகிய முன்னிலைக் கிளவியும்
புள்ளி யிறுதி முன்னிலைக் கிளவியும்
இயல்பா குநவும் உறழ்பா1 குநவுமென்று
ஆயீ ரியல வல்லெழுத்து வரினே.

இஃது , முன்னிலை வினைச்சொல் வன்கணத்துக்கண் முடியுமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்) உயிரீ ஈறாகிய முன்னிலைக் கிளவியும் புள்ளி இறுதி முன்னிலைக் கிளவியும் - உயிர் ஈறாகிய முன்னிலைச் சொற்களும் , புள்ளி இறுதியையுடைய முன்னிலைச் சொற்களும் , வல்லெழுத்துவரின் - வல்லெழுத்து முதல்மொழி வரின் , இயல்பு ஆகுநவும் உறழ்பு ஆகுநவும் என்று அ ஈர் இயல - இயல்பாவனவும் உறழ்ச்சியாவனவும் என அவ்விரண்டு இயல்பினையுடைய .

உயிரீறு புள்ளியீறு என்றமையான் , முன்னிலை வினைச்சொல் என்பது கொள்க.

எ - டு: எறிகொற்றா , கொணாகொற்றா , சாத்தா , தேவா , பூதா எனவும் ; உண்கொற்றா , தின்கொற்றா எனவும் வரும் . இவை இயல்பு .

நடகொற்றா , நடக்கொற்றா எனவும் , ஈர்கொற்றா , ஈர்க்கொற்றா எனவும் வரும் . இவை உறழ்ச்சி2.

(9)

1.(பாடம்) உறழாகுநவும்.(நச்.)

2.இவை முன்னின்றான் தொழிலுணர்த்துவனவும் அவனைத் தொழிற்படுத்துவனவும்3 என இருவகைய . இ, ஐ, ஆய் முதலியன தொழிலுணர்த்துவன . நடவா முதலியன உயிரீறும் புள்ளியீறும் தொழிற்படுத்துவன . நில்கொற்றா நிற்கொற்றா எனத் திரிந்துறழ்ந்தனவும் , உறழாகுநவுமென்னும் பொதுவகையான் முடிக்க இயல்பு முறழ்வுமென் றிரண்டியல்பின் என்னாது ஆகுநவு மென்றதனான் துக்கொற்றா நொக்கொற்றா, ஞெள்ளா நாகா, மாடா வடுகா என ஓரெழுத் தொருமொழி முன்னிலை வினைச்சொல் மிக்கே முடிதல் கொள்க. (நச்.)

3. தொழிலுணர்த்துவன : செய்தாய், செய்கின்றாய், செய்வாய் என்பன போன்ற முக்கால முன்னிலை வினைமுற்று.

தொழிற்படுத்துவன : ஏவல் வினைமுற்று (பாவாணர்)