2. உயிரீறு மெய்யீறுகளின் சிறப்புப் புணர்ச்சி

அதற்குச் சிறப்பு விதி

153.ஒளவென வரூஉம் உயிரீறு சொல்லும்
ஞ ந ம வ வென்னும் புள்ளி யிறுதியும்
குற்றிய லுகரத் திறுதியும் உளப்பட
முற்றத் தோன்றா முன்னிலை மொழிக்கே.

இஃது , மேல் முடிபு கூறியவற்றுட் சிலவற்றிற்கு அம் முடிபு விலக்குதல் நுதலிற்று.

(இ-ள்) ஒள என வரும் உயிர் இறு சொல்லும் - ஒள என வருகின்ற உயிரீற்றுச் சொல்லும் , ஞ ந ம வ என்னும் புள்ளி இறுதியும் - ஞ ந ம வ என்று சொல்லப்படும் புள்ளியீற்றுச் சொல்லும் , குற்றியலுகரத்து இறுதியும் உளப்பட - குற்றியலுகரமாகிய இறுதியையுடைய சொல்லுமாகிய இவை , முன்னிலை மொழிக்கு முற்ற தோன்றா - முன்னிலை மொழிக்குக் கூறிய இயல்பும் உறழ்வுமாகிய முடிவிற்கு முற்றத்தோன்றா .

'முற்ற' என்றதனான் ஈண்டு விலக்கப்பட்ட வற்றுட் குற்றியலுகர ஈறுஒழித்து ஒழிந்தனவெல்லாம் நிலைமொழி உகரம்பெற்று , வருமொழி வல்லெழுத்து உறழ்ந்து முடிதலும் , குற்றியலுகர ஈறு வருமொழி வல்லெழுத்து மிக்கு முடிதலுங் கொள்க.

எ - டு: கௌவுகொற்றா , கௌவுக்கொற்றா , உரிஞுகொற்றா, உரிஞுக்கொற்றா ; பொருநுகொற்றா , பொருநுக்கொற்றா, திருமுகொற்றா , திருமுக்கொற்றா , தெவ்வு கொற்றா, தெவ்வுக் கொற்றா எனவும் ; கூடுகொற்றா , கூடுக்கொற்றா எனவும் வரும்.

(10)