இஃது , உயர்திணைப் பெயர் நான்கு1 கணத்துக்கண்ணும் , இரு வழியும் முடியுமாறு உணர்த்துதல் நுதலிற்று.
(இ-ள்) உயிர் ஈறாகிய உயர்திணைப்பெயரும் - உயிர்ஈறாகிய உயர்திணைப் பெயர்களும் , புள்ளி இறுதி உயர்திணைப் பெயரும் - புள்ளி இறுதியையுடைய உயர்திணைப் பெயர்களும் , எல்லா வழியும் இயல்பு என மொழிப - நான்குகணத்தினும் அல்வழியும் வேற்றுமையுமாகிய எல்லாவிடத்தும் இயல்பாம் என்று சொல்லுவர் . எ - டு: நம்பி எனவும் அவன் எனவும் நிறுத்தி , அல்வழிக்கண் குறியன் , சிறியன் , தீயன் , பெரியன் எனவும் ; ஞான்றான் , நீண்டான் , மாண்டான் எனவும் ; யாவன் , வலியன் எனவும் ; அடைந்தான் , ஒளவியத்தான் எனவும் ; வேற்றுமைக்கண் கை , செவி , தலை, புறம் எனவும் ; ஞாற்சி , நீட்சி ,மாட்சி எனவும் ; யாப்பு வலிமை எனவும் ; அடைபு, ஒளவியம் எனவும் ஒட்டுக . ஒருவன் என நிறுத்தி குறியன் , சிறியன் எனவும் ; கை , செவி , தலை , புறம் எனவும் தன்மைப் பெயர்க் கண்ணும் ஒட்டுக. உயிரீறு புள்ளியிறுதி என்றதனால் , உயர்திணைப்பெயருள் இயல்பன்றி முடிவன வெல்லாம் கொள்க.1.பல்சான்றார் , கபிலபரணர் , இறைவநெடுவேட்டுவர் , மருத்துவமாணிக்கர், பல்லரசர் என இவை ஈறுகெட்டு முடிந்தன . கோலிகக்கருவி , வண்ணாரப் பெண்டிர் , ஆசீவகப்பள்ளி என ஈறுகெட்டு வல்லெழுத்து மிக்கன. குமரகோட்டம், குமரக்கோட்டம் ; பிரமகோட்டம் , பிரமக்கோட்டம் என இவை ஈறுகெட்டு வல்லெழுத்து உறழ்ந்துமுடிந்தன. பிறவும் அன்ன. எல்லாம் என்றதனால் , உயர்திணைச்சொல் இயல்பாயும் திரிந்தும் முடிவன கொள்க . உண்ப சான்றார் , உண்டார் சான்றார் , உண்பேன், பார்ப்பேன் என இவை இயல்பு . உண்டேஞ் - சான்றேம் , உண்டே நாம் என இவை திரிந்தன . பிறவும் அன்ன. (11) 1. நான்குகணம் : வன்கணம் , மென்கணம் , இடைக்கணம் , உயிர்க்கணம் என்ப.2. `பலர்' என்பதன் ரகரமெய்யும் அகரஉயிருடன் கெட்டன.
|