2. உயிரீறு மெய்யீறுகளின் சிறப்புப் புணர்ச்சி

விரவுப்பெயருள் இயல்பு

156.அஃறிணை விரவுப்பெயர் இயல்புமா ருளவே.

இஃது , விரவுப்பெயர் முடிபு கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) அஃறிணை விரவுப்பெயர் இயல்பும் உள - உயர் திணையோடு அஃறிணை விரவும் விரவுப்பெயர் இயல்பாய் முடிவனவும் உள ; இயல்பின்றி முடிவனவும் உள , இயல்பின்றி முடிவன இன்னவாறு முடியுமென , மேல் அகத்தோத்தினுட் கூறப்படும்.

எ - டு: சாத்தன்குறியன் , சாத்தன்குறிது எனவும் ; சாத்தன் கை எனவும் ; இவ்வாறு அல்வழியினும் வேற்றுமையினும் நான்கு கணத்தோடும் ஒட்டிக்கொள்க.

(13)