2. உயிரீறு மெய்யீறுகளின் சிறப்புப் புணர்ச்சி

மூன்றாம் வேற்றுமை முடிபு

157.புள்ளி இறுதியும் உயிரிறு கிளவியும்
வல்லெழுத்து மிகுதி சொல்லிய முறையால்
தம்மி னாகிய தொழிற்சொல் முன்வரின்
மெய்ம்மை யாகலும் உறழத் தோன்றலும்
அம்முறை யிரண்டும் உரியவை உளவே
வேற்றுமை மருங்கிற் போற்றல் வேண்டும்.

இஃது , மூன்றாம் வேற்றுமைத் திரிபு உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்) புள்ளி இறுதியும் உயிர் இறு கிளவியும் - புள்ளியீற்றுச் சொல்லும் , உயிரீற்றுச் சொல்லும் வல்லெழுத்து மிகுதி சொல்லிய முறையான் - வல்லெழுத்தினது மிகுதி மேற்சொல்லும் முறைமையான் , தம்மின் ஆகிய தொழிற்சொல் முன்வரின் - அம் மூன்றாவதன் பொருளாகிய வினைமுதற் பொருள்கள் தம்மான் உளவாகிய வினைச்சொற்கள் தாம் அவற்று முன் வரின் , மெய்ம்மையாகலும் உறழத் தோன்றலும் அ முறை இரண்டும் உரியவை உள - இயல்பாகலும் உறழத்தோன்றுதலுமாகிய அம்முறைமையினையுடைய இரண்டு செய்கையும் உரியன உள . வேற்றுமை மருங்கின் போற்றல் வேண்டும் - அவற்றை மேலே வேற்றுமைப் பொருட்புணர்ச்சி முடிபு சொல்லுமிடத்துப் போற்றியறிதல் வேண்டும்.

எ - டு: நாய்கோட்பட்டான் , புலிகோட்பட்டான் , சாரப்பட்டான் , தீண்டப்பட்டான் , பாயப்பட்டான் என இவை இயல்பு . சூர்கோட்பட்டான் , சூர்க்கோட்பட்டான் , வளிகோட்பட்டான் , வளிக்கோட்பட்டான் என இவை உறழ்ச்சி.

புள்ளியீறு உயிரீறு என்றதனால் , பேஎய்கோட்பட்டான் , பேஎய்க்கோட்பட்டான் என்னும் உறழ்ச்சியுள் எகரப்பேறு கொள்க . உரியவையுள என்றதனான் , பாம்புகோட்பட்டான் , பாம்புக்கோட்பட்டான் என்னும் உறழ்ச்சியுள் நிலைமொழி யொற்றுத் திரியாமையும் திரிதலும் கொள்க.

(14)