இஃது, அவ்விகர ஐகாரவீற்றுள் ஏழாம்வேற்றுமை இடப்பொருள் உணர நின்ற இடைச்சொல் முடிபு நுதலிற்று.
(இ-ள்) சுட்டு முதலாகிய இகர இறுதியும் - சுட்டெழுத்தினை முதலாகவுடைய இகரவீற்று இடைச்சொல்லும் எகர முதல் வினாவின் இகர இறுதியும் - இறுதியும் எகரமாகிய மொழி முதல் வினாவினுடைய இகரவீற்று இடைச்சொல்லும், சுட்டுச்சினை நீடிய ஐஎன் இறுதியும் - சுட்டாகிய உறுப்பெழுத்து நீண்ட ஐகாரவீற்று இடைச்சொல்லும், யா என் வினாவின ஐ என் இறுதியும் - யா என்னும் வினாவினை முதற்கண்ணுடைய ஐகாரவீற்று இடைச்சொல்லும், வல்லெழுத்து மிகுநவும் உறழாகுநவும் சொல்லிய மருங்கின் உள என மொழிப - வல்லெழுத்து மிக்கு முடிவனவும் உறழ்ச்சியாய் முடிவனவும் மேற்சொல்லப்பட்ட இடத்தின் கண்ணே உள வென்று சொல்லுவர் புலவர். எ - டு: அதோளிக்கொண்டான், இதோளிக்கொண்டான், உதோளிக்கொண்டான், எதோளிக்கொண்டான், சென்றான், தந்தான், போயினான் எனவும் ஆண்டைக்கொண்டான், ஈண்டைக்கொண்டான், ஊண்டைக்கொண்டான், யாண்டைக்கொண்டான் எனவும் இவை மிக்கு முடிந்தன. அவ்வழிகொண்டான், அவ்வழிக்கொண்டான்; இவ்வழிகொண்டான், இவ்வழிக்கொண்டான்; உவ்வழிகொண்டான், உவ்வழிக்கொண்டான்; எவ்வழிகொண்டான், எவ்வழிக்கொண்டான் எனவும்1 ஆங்கவைகொண்டான், ஆங்கவைக்கொண்டான்; ஈங்கிவைகொண்டான், ஈங்கிவைக்கொண்டான்; ஊங்குவைகொண்டான், ஊங்குவைக்கொண்டான்; யாங்கவைகொண்டான், யாங்கவைக்கொண்டான்; எனவும் இவை உறழ்ந்து முடிந்தன இவற்றுள் ஐகார வீற்றுள் உறழ்ந்து முடிந்தன. திரிபுடையன. திரிபில்லன பெற்றவழிக் கண்டு கொள்க. "சொல்லியமருங்கு" என்றதனால், பிற ஐகாரவீறு மிக்கு முடிவன கொள்க பண்டைச்சான்றார், ஒருதிங்களைக் குழவி என வரும். (17)
1. மறுப்பு: ஆங்கவைகொண்டான், ஆங்கவைக்கொண்டான் என்பன காட்டுவாருமுளர். அவை திரிபுடையனவாம். (நச்.)
|