இஃது, புள்ளி மயங்கியலை நோக்கியதோர் நிலைமொழிக்கருவி கூறுதல் நுதலிற்று .
(இ-ள்) நெடியதன் முன்னர் ஒற்று மெய் கெடுதலும் - நெட்டெழுத்தின்முன் நின்ற ஒற்றுத் தன்வடிவு கெடுதலும், குறியதன் முன்னர் தன்உருபு இரட்டலும் - குற்றெழுத்தின் முன்னர் நின்ற ஒற்றுத் தன்வடிவு இரட்டுதலும் அறியத் தோன்றிய நெறி இயல் என்ப - இவை அறியும்படி தோன்றிய முறைமையான இயல்புடையனவென்று சொல்லுவர். எ - டு: கோறீது, கோனன்று என இவை நெடியதன் முன்னர் ஒற்றுக்கெட்டன. மண்ணகல், பொன்னகல் என இவை குறியதன் முன்னர்த் தன்னுருபு இரட்டின. மேலைச்சூத்திரத்து நான்கனுருபிற் கூறியவதனான், ஒற்று இரட்டுதல் உயிர்முதன்மொழிக்கண்ணதென்று கொள்க. குறியது பின்கூறிய முறையன்றிய கூற்றினால் நெடியன குறுகிநின்ற வழியும் குறியதன் முன்னர் ஒற்றாய் இரட்டுதலும், குறியது திரிந்து நெடியதாயவழி அதன்முன்னர் ஒற்றுக்கெடுதலும் கொள்க. தம்மை, நம்மை என இவை நெடியன குறுகிநின்று ஒற்று இரட்டின. மற்றையது வந்தவழிக் கண்டுகொள்க. `அறிய' என்றதனால், நெடியதன்முன்னர் ஒற்றுக் கெடுவது தகார நகாரங்கள் வந்து திரிந்தவழி யென்பதூஉம், ஆண்டெல்லாம் கெடாதென்பதூஉங் கொள்க. தேன்றீது என்பது ஆண்டுக் கெடாதது. `நெறியியல்' என்றதனாற் குறியதன் முன்னர் நின்ற ஒற்றின்றிப் புணர்ச்சியாற் பெற்றதும் இரட்டுமென வுணர்க. அவ்வடை என வரும். (18)
(பாடம்)1. தன்னுரு இரட்டலும். (நச்.)
|