இஃது, உருபியலை நோக்கியதோர் நிலைமொழிக்கருவி கூறுதல் நுதலிற்று.
(இ-ள்) ஆறன் உருபினும் நான்கன் உருபினும் ஈறு ஆகு புள்ளி அகரமொடு நிலையும் - ஆறனுருபின்கண்ணும் நான்கனுருபின்கண்ணும் ஈறாகு புள்ளிகள் அகரத்தொடு நிலைபெறும், நெடு முதல் குறுகும் மொழிமுன் கூறிய குற்றொற்று இரட்டல் இல்லை - நெடிதாகிய முதலெழுத்துக் குறுகிமுடியும் மொழிக்கண் மேற்கூறிய குற்றொற்று இரட்டல் (ஆறனுருபின்கண்ணும் நான்கனுருபின்கண்ணும்) இல்லை. எ - டு: தமது, தமக்கு; நமது, நமக்கு என வரும். `கூறிய' என்றதனானே1 நெடுமுதல் குறுகாதமொழிக்கு இவ்விருவிதியும் கொள்க. எல்லார் தமதும், எல்லார் தமக்கும் என வரும். (19)
1.நெடுமுதல் குறுகாத மொழிகள் தம், நம், நும் என்னும் சாரியை இடைச்சொற்கள், இங்ஙனம் காட்டிய நெடுமுதல் குறுகாத மொழிகட்கு, முன்னர் நன்னூல் விருத்தியுட் காட்டினமையுணர்க.
|