2. உயிரீறு மெய்யீறுகளின் சிறப்புப் புணர்ச்சி

அளபு நிறை எண்ணுப் பெயர்கள் தம்மிற் புணருமாறு

165.உயிரும் புள்ளியும் இறுதி யாகி
அளவும் நிறையும் எண்ணுஞ் சுட்டி
உளவெனப் பட்ட எல்லாச் சொல்லும்
தத்தங் கிளவி தம்மகப் பட்ட
முத்தை வரூஉங் காலந் தோன்றின்
ஒத்த தென்ப ஏயென் சாரியை.

இஃது, அளவுப்பெயரும் நிறைப்பெயரும் எண்ணுப்பெயரும் தம்மிற் புணருமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்) உயிரும் புள்ளியும் இறுதியாகி அளவும் நிறையும் எண்ணும் சுட்டி உள எனப்பட்ட எல்லா சொல்லும் - உயிரும் புள்ளியும் ஈறாய் அளவையும் நிறையையும் எண்ணையும் கருதி உளவென்று சொல்லப்பட்ட எல்லாச் சொற்களும், தம் தம் கிளவி தம் அகப்பட்ட முத்தைவரும் காலம் தோன்றின் ஏ என்சாரியை ஒத்தது என்ப-தமக்கு இனமாகிய சொற்களாய்த் தமக்கு அகப்படும் மொழியாயுள்ளன தம்முன்னே வரும் காலம் தோன்றுமாயின் ஏ என்னுஞ் சாரியை பெற்று முடிதலைப் பொருந்திற்று என்ப.

எ - டு:உழக்கே யாழாக்கு, கலனே பதக்கு என இவை அளவுப் பெயர். தொடியேகஃசு, கொள்ளே ஐயவி என இவை நிறைப்பெயர். காணியே முந்திரிகை, காலேகாணி என இவை எண்ணுப் பெயர்.

உயிரீறு புள்ளியீறு என்றதனானே, ஏ என் சாரியை பெறாதனவும் உளவென்று கொள்க. குறுணி நானாழி என வரும்.

(22)