2. உயிரீறு மெய்யீறுகளின் சிறப்புப் புணர்ச்சி

அவை `அரை' என்பதனோடு புணர்தல்

166.அரையென வரூஉம் பால்வரை கிளவிக்குப்
புரைவ தன்றாற் சாரியை யியற்கை.

இஃது , எய்தியது விலக்குதல் நுதலிற்று .

(இ-ள்) அரை என வரும் பால் வரை கிளவிக்கு புரைவது அன்று சாரியை இயற்கை - அரை என்று சொல்ல வருகின்ற பொருட்கூற்றை யுணரநின்ற சொல்லிற்குப் பொருந்துவதன்று மேற்கூறிய ஏ என் சாரியை பெறும் இயல்பு.

எ - டு: உழக்கரை, தொடியரை, ஒன்றரை என வரும்.

இஃது, "ஒட்டுதற் கொழுகிய வழக்கு" (புணரியல் - 30) அன்று என்பதனான் விலக்குண்ணாதோவெனில், `தம்மகப்பட்ட' என்று வருமொழியையும் வரைந்தோதினமையின் இதற்கு அவ்விதி செல்லாதென்பது.

(23)