இஃது, எய்தியது விலக்கிப் பிறிதுவிதி உணர்த்துதல் நுதலிற்று .
(இ-ள்) குறை என் கிளவி முன் வருகாலை - குறை என்னும் சொல் அளவு முதலியவற்றின்முன் வருங்காலத்து, நிறைய தோன்றும் வேற்றுமை இயற்கை - நிறையத் தோன்றும் மேல் வேற்றுமைப் பொருட்புணர்ச்சி முடிபிற்குச் சொல்லும் இயல்பு. எ - டு: உரிக்குறை, கலக்குறை, தொடிக்குறை, கொட்குறை, காணிக்குறை, காற்குறை என வரும். `முன்' என்றதனான், பொருட்பெயரோடு புணரும் வழியும் வேற்றுமை முடிபு எய்துகவென்பது, கலப்பயறு என வரும். `நிறைய' என்பதனால், கூறு என்பதன் கண்ணும் வேற்றுமை முடிபு எய்துமென்பது நாழிக்கூறு என வரும். (24)
|