நூன்மரபு

4.வடிவு

உயிர் மெய்யெழுத்தின் இயல்பு

17.புள்ளி யில்லா எல்லா மெய்யும்
உருவுரு வாகி அகரமோ டுயிர்த்தலும்
ஏனை உயிரோ டுருவுதிரிந் துயிர்த்தலும்
ஆயீ ரியல உயிர்த்த லாறே.

இஃது, உயிரும் மெய்யும் கூடுமாறு உணர்த்துதல் நுதலிற்று.

எல்லா மெய்யும் புள்ளி இல்லா - எல்லா மெய்களும் புள்ளி இல்லையாம்படியாக, உருவு உருவு ஆகி - தத்தம் முன்னை வடிவே பின்னும் வடிவாக, அகரமோடு உயிர்த்தலும் - அகரத்தோடு கூடி ஒலித்தலும், ஏனை உயிரோடு உருவு திரிந்து உயிர்த்தலும் - ஒழிந்த உயிர்களோடு வடிவு வேறுபட்டு ஒலித்தலுமாகிய அ ஈர் இயல - அவ்விரண்டு இயல்பினையுடைய, உயிர்த்தல் ஆறு, அவை ஒலிக்கு முறைமை.

"தன்னின முடித்தல்" என்பதனான், அளபெடை உயிரோடும் சார்பிற்றோற்றத்து உயிரோடும் கூடும் உயிர்மெய்யும் கொள்க.

எ - டு:உருவு உருவாகி உயிர்த்தல் க ங எனக் கண்டு கொள்க. உருவு திரிந்து உயிர்த்தல் கா ஙா எனக் கண்டு கொள்க.

ஈண்டு உயிரும் மெய்யும் கூடுகின்ற உயிர்மெய்க்கூட்டத்தினை, எல்லா மெய்யுமென்று மெய்மேல் வைத்துக் கூறியது, அது முன் கூறிக் கூறப்படுதல் நோக்கிப் போலும். உயிர்மெய் யென்பதனை, ஒற்றுமை கொள்வுழி உம்மைத் தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை யெனவும், வேற்றுமை கொள்வுழி உம்மைத் தொகை யெனவும் கொள்க. `இல்லாத' என்பது `இல்லா' என நின்றது, உருவு திரிந்து உயிர்த்தல் மேலும் கீழும் விலங்கு பெறுவன விலங்குபெற்று உயிர்த்தலும். கோடுபெறுவன கோடு பெற்று உயிர்த்தலும், புள்ளிபெறுவன புள்ளி பெற்று உயிர்த்தலும், புள்ளியும் கோடும் உடன்பெறுவன புள்ளியும் கோடும் உடன்பெற்று உயிர்த்தலும் எனக் கொள்க.

(17)