2. உயிரீறு மெய்யீறுகளின் சிறப்புப் புணர்ச்சி

அளவுநிறைப் பெயர்களின் மொழிமுதலாம் எழுத்துக்கள்

171.அளவிற்கும் நிறையிற்கும் மொழிமுத லாகி
உளவெனப் பட்ட ஒன்பதிற் றெழுத்தே
அவைதாம்
க ச த ப என்றா ந ம வ என்றா
அகர உகரமொ டவையென மொழிப.

இஃது, அளவுப்பெயர்க்கும் நிறைப்பெயர்க்கும் முதலாம் எழுத்துக்கு வரையறை கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) அளவிற்கும் நிறையிற்கும் மொழிமுதலாகி உள எனப்பட்ட ஒன்பதிற்று எழுத்து - அளவுப் பெயர்க்கும் நிறைப்பெயர்க்கும் மொழிமுதலாய் உளவென்று சொல்லப்பட்டன ஒன்பதெழுத்து, அவை தாம் - அவை (யாவையோ வெனின்) க ச த ப என்றா ந ம வ என்றா அகரமொடு உகரமொடு அவை என மொழிப - க ச த பக்களும் ந ம வக்களும் அகரமும் உகரமுமாகிய அவை என்று சொல்லுவர்.

எ - டு: கலம், சாடி, தூதை, பானை, நாழி, மண்டை, வட்டில், அகல், உழக்கு எனவும், கழஞ்சி, சீரகம், தொடி, பலம், நிறை, மா, வரை, அந்தை எனவும் வரும்.

`உளவெனப் பட்ட' என்றதனான், உளவெனப் படாதனவும் அளவை உளவென்பது. இம்மி, ஓரடை, ஓராடை என வரும்.

மற்று இவ்வரையறை கூறிப் பயந்தது என்னையெனின், மேல் அகத்தோத்தினுள் அவற்றிற்கு முடிபு கூறும் வழி அதிகாரத்தான் வன்கணத்தும், மேற்சொல்லா தொழிந்த கணத்தினும் சேறற்கு என்பது.

(28)