இஃது, மேற்கூறிய ஈற்றுள் அகரஈற்றுள் சிலவற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி கூறுதல் நுதலிற்று.
(இ-ள்) பல்லவை நுதலிய பெயர் இறு அகரம் - பன்மைப் பொருளைக் கருதின பெயர்களின் இறுதி அகரம், வற்றொடு சிவணல் எச்சம் இன்று - வற்றுச்சாரியையொடு பொருத்துதலை ஒழிதல் இல்லை. எ - டு: பல்லவற்றை, பல்லவற்றோடு; உள்ளவற்றை, உள்ளவற்றோடு; இல்லவற்றை, இல்லவற்றோடு; சில்லவற்றை, சில்லவற்றோடு என ஒட்டுக. `எச்சமின்று' என்றதனான் ஈண்டு மூன்றாம் உருபின்கண் சாரியை பெற்றே முடியுமென்று கொள்க இன்னும் இதனானே மேல் இன் பெற்றன பிறசாரியையும் பெறுமெனக் கொள்க. மகத்தை, நிலாத்தை என வரும். (2)
|