இஃது, ஐகாரவீற்றுட் சிலமொழிக்கு முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்) சுட்டு முதலாகிய ஐ என் இறுதி - சுட்டெழுத்தினை முதலாகவுடைய ஐகாரவீற்றுச்சொல். வற்றொடு சிவணி நிற்றலும் உரித்து - வற்றுச் சாரியையொடு பொருந்தி அவ்வீற்று ஐகாரம் நிற்றலுமுரித்து; (நில்லாமையு முரித்து.) எ - டு: அவையற்றை, அவையற்றோடு; இவையற்றை, இவையற்றோடு; உவையற்றை, உவையற்றோடு என ஒட்டுக. ஐகாரம் கெட்டவழி, நின்ற வகரத்தினை வற்றின்மிசை ஒற்றென்று கெடுத்து அவற்றை, இவற்றை, உவற்றை என ஒட்டுக. மற்று, இம் முடிபு சுட்டுமுதல் வகர வீற்றோடு ஒத்தமையின், ஈண்டு இது கூறல் மிகைபடக் கூறலாம் பிற எனின், அஃது ஒக்கும்; இவ்வாறு கூறுவன மேலும் உள; அவற்றிற்கெல்லாம் ஆசிரியன் கருத்து அறிந்து கொள்ளப்படுமென்பது. (5)
|