இஃது, ஈகாரவீற்றுள் ஒரு மொழிக்கு முடிபு கூறுதல் நுதலிற்று.
(இ-ள்) நீ என் ஒருபெயர் நெடுமுதல் குறுகும் - நீ என்னும் ஒரு பெயர் நெடிதாகிய முதல் குறுகும்; ஆ வயின் னகரம் ஒற்றாகும் - அவ்விடத்து வரும் னகரம் ஒற்றாகும். எ - டு: நின்னை, நின்னொடு என ஒட்டுக. `ஒரு பெயர்' என்றது, நின் என்பதும் வேறொரு பெயர் போறலை விலக்கிற்று. பெயர் குறுகும் என்னாது முதல் குறுகும் என்றது, அப்பெயரின் நெட்டெழுத்து நிலையது அக் குறுக்கமென்றற்கென்பது, நெடுமுதல் என்றது அம்மொழி முதலின் நகரம் குறுகுதலை விலக்கிற்று. ஈண்டு, உயிர்மெய் யொற்றுமை பற்றி நெடியது முதலாயிற்று - சாரியைப் பேற்றிடை எழுத்துப் பேறு கூறியது, மூன்றாம் உருபின்கண் சாரியை பெற்றே வந்த அதிகாரம் மாற்றி நின்றது. (7)
|