1. உயிரீறுகள்

ஓகார ஈற்றுக்கு ஒன்சாரியை

181.ஓகார இறுதிக்கு ஒன்னே சாரியை.

இஃது, ஓகார ஈறு முடியுமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்) ஓகார இறுதிக்குச் சாரியை ஒன் - ஓகாரவீற்றுக்கு இடைவரும் சாரியை ஒன்சாரியை.

எ - டு: கோஒனை, கோஒனொடு என ஒட்டுக.1


1.சிறுபான்மை இன்சாரியை வருமென்று கொள்க. `ஒன்றாக நின்ற கோவினை யடர்க்க வந்த' எனவும், கோவினை கோவினோடு சோவினை சோவினொடு ஓவினை ஓவினொடு எனவும் வரும். ஓவென்பது மதகுநீர் தாங்கும் பலகை. (நச்)

(8)