இஃது, வகரவீறு நான்கனுள்ளும் சுட்டு முதல் வகரவீற்றிற்கு முடிபு கூறுதல் நுதலிற்று.
(இ-ள்) சுட்டுமுதல் வகரம் - சுட்டெழுத்தினை முதலாகவுடைய வகரவீற்றுச்சொல், ஐயும் மெய்யும் கெட்ட இறுதி இயல்திரிபு இன்று - ஐகாரமும் அதனாற் பற்றப்பட்ட மெய்யும் கெட்டு வற்றுப்பெற்று முடிந்த சுட்டுமுதல் ஐகாரவீற்றியல்பில் திரிபின்றி வற்றுப் பெற்று முடியும். எ - டு: அவற்றை அவற்றொடு; இவற்றை இவற்றொடு; உவற்றை உவற்றொடு என ஒட்டுக. (11)
|