இஃது, மகரவீற்றுள் முன்கூறிய முடிபு ஒவ்வாதனவற்றிற்கு முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்) தாம் நாம் என்னும் மகர இறுதியும் யாம் என் இறுதியும் அதன் ஓர் அன்ன-தாம் நாம் என்று சொல்லப்படும். மகரவீறும் யாம் என்னும் மகரவீறும் மேற்கூறிய நும் என்னும் மகரவீறு போல அத்தும் இன்னும் பெறாது முடிதலையுடையவாம் யாம் என் இறுதி ஆ எ ஆகும்-யாம் என்னும் மகரவீற்று மொழி-ஆகாரம் ஏகாரமாம்; அ வயின் யகரமெய் கெடுதல் வேண்டும். அவ்விடத்து யகரமாகிய மெய் கெடுதல் வேண்டும்; ஏனை இரண்டும் நெடுமுதல் குறுகும்-ஒழிந்த இரண்டும் நெடியவாகிய முதல் குறுகி நின்று முடியும். எ - டு: தம்மை, தம்மொடு; நம்மை, நம்மொடு; எம்மை, எம்மொடு என ஒட்டுக. `ஆவயின்மெய்' என்றதனால், பிறவயின் மெய்யும் கெடுமெனக் கொள்க. தங்கண், நங்கண், எங்கண் என வரும். (16)
(பாடம்)1.ஆஎவ் வாகும்.(நச்.)
|