நூன்மரபு

4.வடிவு

வல்லினமெய்

19.வல்லெழுத் தென்ப க ச ட த ப ற.

இஃது, தனிமெய்களுள் சிலவற்றிற்கு வேறு ஓர் குறியிடுதல் நுதலிற்று.

வல்லெழுத்து என்ப - வல்லெழுத்து என்னும் குறிய என்று சொல்லுவர் , க ச ட த ப ற - க ச ட த ப ற என்னும் தனிமெய்களை.

வல்லென்று இசைத்தலானும் , வல் என்ற தலைவளியாற் பிறத்தலானும் வல்லெழுத்து எனப்பட்டது. மொழிக்கு முதலாமெழுத்து நான்கு உளவாகலானும் , அவற்றால் வழக்குப்பயிற்சி பெரிதாகலானும் ( வல்லினம் ) முன்கூறப்பட்டது.

(19)