2. மெய்யீறுகள்

`எல்லாம் ' என்னும் மகர ஈற்றின் வற்றின் உம்மும்

190.எல்லா மென்னும் இறுதி முன்னர்
வற்றென் சாரியை முற்றத் தோன்றும்
உம்மை நிலையும் இறுதி யான.

இஃது, மகரவீற்றுள் ஒருமொழிக்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தல் நுதலிற்று.

(இ-ள்) எல்லாம் என்னும் இறுதிமுன்னர் - எல்லாம் என்னும் யகரவீற்றுச் சொல்லின்முன்பு வற்று என் சாரியை முற்றத்தோன்றும் - மேற்கூறிய அத்தும் இன்னுமன்றி வற்று என்னும் சாரியை முடியத்தோன்றி முடியும், உம்மை நிலையும் இறுதியான-உம் என்னும் சாரியை முடியத்தோன்றி முடியும், உம்மை நிலையும் இறுதியான - உம் என்னும் சாரியை நிலைபெறும் இறுதிக்கண்.

எ - டு: எல்லாவற்றையும், எல்லாவற்றோடும் என ஒட்டுக

`முற்ற' என்றதனான், மூன்றாம் உருபின்கண்ணும் நான்காம் உருபின்கண்ணும் ஆறாம் உருபின்கண்ணும் உம்மின் உகரக்கேடு கொள்க.1

(17)

1. எல்லாவற்றொடும், எல்லாவற்றுக்கும், எல்லாவற்றதும் என வரும், `முற்றுகர' மாதலின் ஏறி முடியா. (நச்.)

இங்கு முற்றுகரம் என்றது ஒடு,கு, அது என்னும் உருபுகளை. (பாவாணர்.)