2. மெய்யீறுகள்

உயர் திணையில் அது `நம்' சாரியை பெறுதல்

191. உயர்திணை யாயின் நம்மிடை வருமே.

இதுவும் அது.

(இ-ள்) உயர்திணையாயின் நம் இடைவரும்-எல்லாம் என்னும் விரவுப்பெயர் அஃறிணைப் பெயரன்றி உயர்திணைப் பெயராய் நிற்குமாயின், நம் இடைவரும்-நம் என்னும் சாரியை இடை வந்து புணரும்.

நிலைமொழியொற்றும் மேல் `வற்று மிசையொற்று' என்று கெட்டுநின்ற அதிகாரத்தாற் கெடுக்க இன்னும் அதனானே உம்மும்பெற்றும், அதன்கண் உகரம் சில உருபின்கண் கெடுதலும் கொள்க.

எ - டு: எல்லா நம்மையும், எல்லா நம்மொடும் என ஒட்டுக.1

(18)

1.மகர ஈற்றினை மேல் வற்றின்மிசை யொற்றெனக் கெடுத்த அதிகாரத்தாற் கெடுக்க, எல்லா நம்மையும் எல்லா நம்மினும் எல்லா நங்கணும் என உகரம் பெற்றும் எல்லா நம்மொடும் எல்லா நமக்கும் எல்லா நமதும் என உகரங்கெட்டும், மகரம் நிற்கும். இவற்றிற்கு எல்லாரையும் எல்லாரொடும் என்பது பொருளாக ஒட்டுக. இதற்கு நம்மு வகுத்ததே வேறுபாடு. `ஈறாகு புள்ளி அகரமொடு நிற்றல்' (ஏழு: 196) நான்காவதற்கும் ஆறாவதற்குங் கொள்க.[நச்.]

எல்லாம் என்பதில் `ஆம்' ஈறு தன்மைப் பன்மையாதலாலும் அது பெற்றுவரும் `நம்' சாரியை தன்மையிடத்திற் குரியதாதலாலும். அடுத்த நூற்பாவில் எல்லாரும் எல்லீரும் என்னும் படர்க்கை முன்னிலைப் பெயர்கள் முறையே தம் நும் என்னும் சாரியைபெறுமென்று கூறியிருப்பதாலும்,எல்லா நம்மையும் எல்லா நம்மொடும் என்பவற்றிற்கு நம்மெல்லாரையும் நம் எல்லாரோடும் என்று தன்மைப் பொருள் கொள்ளாது எல்லாரையும் எல்லாரொடும் என்று படர்க்கைப்பொருள் கொள்வது பொருந்தாது.[பாவாணர்]