இஃது, மகரவீற்றுட் சிலவற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தல் நுதலிற்று. (இ-ள்) எல்லாரும் என்னும் படர்க்கை இறுதியும்- எல்லீரும் என்னும் முன்னிலை இறுதியும் எல்லாரும் என்று சொல்லப்படும் படர்க்கையிடத்து மகரவீற்றுச் சொல்லும் எல்லீரும் என்று சொல்லப்படும் முன்னிலையிடத்து மகரவீற்றுச் சொல்லும், ஒற்றும் உகரமும் கெடும் என மொழிப- இவற்றின் மகரவொற்றும் அதன்முன் நின்ற உகரமுங் கெட்டு முடியுமென்று சொல்லுவர். ரகரப்புள்ளி நிற்றல் வேண்டும்- அவ்வுகரம் கெடுவழி அதனால் ஊரப்பட்ட ரகரப்புள்ளி கெடாது நிற்றல் வேண்டும். இறுதியான உம்மை நிலையும்- அவ்விரு மொழிக்கும் இறுதிக்கண் உம் என்னும் சாரியை நிலைபெறும். படர்க்கை மேன தம் இடைவரும்- படர்க்கையிடத்துத் தம்முச் சாரியை இடைவரும் , முன்னிலை மொழிக்கு நும் இடைவரும்-முன்னிலை மொழிக்கு நும்முச்சாரியை இடைவரும். எ - டு: எல்லார்தம்மையும், எல்லார்தம்மொடும்; எல்லீர் நும்மையும், எல்லீர் நும்மொடும் என ஒட்டுக. 'படர்க்கை' முன்னிலை என்ற மிகுதியான் மகரவீற்றுத்தன்மை பெயரிடைக்கண் நம்முச்சாரியையும் ஈற்றுக்கண் உம்முச்சாரியையும் பெற்றுமுடிவன கொள்க. கரியே நம்மையும், கரியேநம்மொடும் என ஒட்டுக. படர்க்கைப் பெயர் முற்கூறியவதனால், ரகாரவீற்றுப் படர்க்கைப் பெயரும் முன்னிலைப் பெயரும் இறுதிக்கண் தம்மொடு நும்முச்சாரியையும் பெற்று முடிவன கொள்க. கரியார் தம்மையும், சான்றீர் நும்மையும் என ஒட்டுக உகரமும் ஒற்றும் என்னாத முறையன்றி கூற்றினான், அம்மூன்று உருபின்கண் உம்மின் உகரக்கேடு எடுத்தோதியவற்றிற்கும் இலேசினாற் கொண்டவற்றிறகும் கொள்க. (19)
|