2. மெய்யீறுகள்

`தான்' `யான்' என்னும் னகர ஈற்றுப்பெயர்கள் சாரியை பெறாமை

193.தான்யான் என்னும் ஆயீ ரிறுதியும்
மேன்முப் பெயரோடும் வேறுபா டிலவே.

இஃது, னகரவீற்றுட் சிலவற்றிற்கு முடிபு கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) தான் யான் என்னும் ஆ ஈர் இறுதியும்- தான் யான் என்று சொல்லப்படும் அவ்விரண்டு னகர வீறும், மேல் முப்பெயரொடும் வேறுபாடு இல-மேல் மகர வீற்றுட் சொல்லப்பட்ட மூன்று பெயரோடும் வேறுபாடின்றித் தானென்பது நெடுமுதல் குறுகியும் யான் என்பதன்கண் ஆகாரம் எகாரமாய் யகரங்கெட்டும் முடியும்.

எ - டு: தன்னை, தன்னொடு; என்னை என்னொடு என ஒட்டுக.

(20)