2. மெய்யீறுகள்

`அழன்' `புழன்' என்னும் னகர ஈறுகள் அத்தும் இன்னும் பெறுதல்.

194.அழனே புழனே ஆயிரு மொழிக்கும்
அத்தும் இன்னும் உறழத் தோன்றல்
ஒத்த தென்ப உணரு மோரே.

இதுவும் அது,

(இ-ள்) அழன் புழன் அ இரு மொழிக்கும்- அதன் புழனாகிய அவ்விருமொழிக்கும் , அத்தும் இன்னும் உறழத்தோன்றல் ஒத்தது என்ப உணருமோர்- அத்துச் சாரியையும் இன் சாரியையும் மாறிவரத் தோன்றுதலைப் பொருத்திற்றென்ப உணருவோர்.

எ - டு: அழத்தை, அழத்தொடு; அழனினை, அழனினொடு; புழத்தை, புழத்தொடு; புழனினை புழனினொடு என ஒட்டுக.

`தோன்றல்' என்றதனான் எவன் என்றும் என் என்றும் நிறுத்தி வற்றுக்கொடுத்து வேண்டும் செய்கைசெய்து எவற்றை எவற்றொடு எனவும் எற்றை எற்றொடு எனவும் முடிக்க.

`ஒத்தது' என்றதனால், எகின் என நிறுத்தி அத்தும் இன்னும் கொடுத்துச் செய்கை செய்து எகினத்தை, எகினத்தொடு எகினினை, எகினினொடு எனவும் முடிக்க.

அத்து முற்கூறியவதனான், அத்துப் பெற்றவழி இனிது இசைக்குமெனக்கொள்க.

அழன்-பிணம்.

(21)