3. முற்றுகர குற்றுகர ஈறுகள்

`ஏழு' என்னும் எண்ணுப்பெயர்க்கு அன்சாரியை

195.அன்னென் சாரியை ஏழன் இறுதி
முன்னர்த் தோன்றும் இயற்கைத் தென்ப.

இஃது, ழகாரவீற்று ஒருமொழிக்கு முடிபு கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) அன் என் சாரியை ஏழன் இறுதி முன்னர்த் தோன்றும் இயற்கைத்து என்ப-அன் என்னும் சாரியை ஏழென்னும் சொல்லிறுதியின் முன்னே தோன்றும் இயல்பினையுடைத்தென்று சொல்லுவர்.

எ - டு: ஏழனை ஏழனொடு என ஒட்டுக.

சாரியை முற்கூறியவதனால், பிறவும் அன்பெறுவன கொள்க. பூழனை, பூழனொடு ; யாழனை; யாழனொடு என ஒட்டுக.1


1.மேல் வருகின்ற இன்சாரியையை சேர வைத்தமையான் அவையெல்லாம் இன்சாரியை பெற்று வருதலுங் கொள்க. ஏழினை, பூழினை, யாழினை என வரும். (நச்)

(22)