நூன்மரபு

1. எழுத்துக்களின் வகை

சார்பெழுத்துக்கள்

2.அவைதாம்,
குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் என்ற
முப்பாற் புள்ளியும் எழுத்தோ ரன்ன.

இஃது, மேல் சார்ந்துவரும் என்னப்பட்ட மூன்றற்கும் பெயரும் முறையும் உணர்த்துதல் நுதலிற்று.

அவைதாம் - மேற் சார்ந்துவரும் எனப்பட்டவை தாம், குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் என்ற முப்பால் புள்ளியும் -குற்றியலிகரமும் குற்றியலுகரமும் ஆய்தமும் என்று சொல்லப்பட்ட மூன்று கூற்றதாகிய புள்ளியும் என இவை எழுத்து ஓர் அன்ன - (அவை) மேற்சொல்லப்பட்ட முப்பது எழுத்தோடு ஒரு தன்மைய.

அப்பெயர், பெயர், அம்முறை, முறை. `எழுத்தோரன்ன' என வேண்டா கூறியவதனால், முன் `எனப்படுப' என்ற சிறப்பு, அம்மூன்றற்கும் கொள்ளக் கிடந்தமையின், அது விலக்குதல் பெறுதுமென்பது. குற்றியலிகரமும் குற்றியலுகரமும் என்னும் எண்ணும்மை விகாரத்தால் தொக்கன. சந்தனக்கோல் குறுகினவிடத்துப் பிரப்பங் கோல் ஆகாது. அதுபோல, இகர உகரங்கள் குறுகின விடத்தும், அவை1 உயிர் ஆகற்பாலன. அவற்றைப் புணர்ச்சிவேற்றுமையும் பொருள்வேற்றுமையும் நோக்கி வேறெழுத்தென்று வேண்டினாரென உணர்க.

(2)


(பாடம்) 1. பெயர்.