3. முற்றுகர குற்றுகர ஈறுகள்

ஒருபஃது முதலிய குற்றுகர ஈறுகள் அன்சாரியையும் பெறுதல்

200.ஒன்று முதலாகப் பத்தூர்ந்து வரூஉம்
எல்லா எண்ணுஞ் சொல்லுங் காலை
ஆனிடை வரினும் மான மில்லை
அஃதென் கிளவி ஆவயிற் கெடுமே
உய்தல் வேண்டும் பஃகான் மெய்யே.

இதுவும் அது.

(இ-ள்) ஒன்று முதலாக பத்து ஊர்ந்து வரும் எல்லா எண்ணும் - ஒன்று என்னும் எண்ணுப்பெயர் முதலாகப் பத்து என்னும் எண்ணுப்பெயரால் ஊரப்பட்டுவரும் எல்லா எண்ணுப் பெயர்களும், சொல்லுங்காலை - முடிபு சொல்லுங்காலத்து, ஆன் இடைவரினும் மானம் இல்லை - அவ்வீற்றிற்கு மேற் கூறிய அன்னேயன்றி ஆன்சாரியை இடைவரினும் குற்றமில்லை, அவயின் அஃது என் கிளவி கெடும் - அவ்வான்சாரியை பெற்றவழி அஃது என்னும் சொல் கெடும், பஃகான்மெய் உய்தல் வேண்டும் - அது கெடுவழி அவ்வகரத்தான் ஊரப்பட்ட பகரமாகிய மெய் கெடாது நிற்றல் வேண்டும்.

எ - டு: ஒருபானை, ஒரு பானொடு; ஒருபஃதினை, ஒரு பஃதினொடு, இருபஃதினை , இருபஃதினொடு என ஒட்டுக.

`சொல்லுங்காலை' என்றதனால், ஒன்பதென்னும் எண்ணுப் பெயரும் ஆன் பெற்று அவ்வீற்றின் அது என்னும் சொற்கெட்டு முடிதல் கொள்க. ஒன்பானை, ஒன்பானொடு என ஒட்டுக.

(27)