3. முற்றுகர குற்றுகர ஈறுகள்

`யாது' `அஃது' என்னும் குற்றுகர ஈறுகட்கு அன்சாரியை

201.யாதென் இறுதியுஞ் சுட்டு முதலாகிய
ஆய்த இறுதியும் அன்னொடு சிவணும்
ஆய்தங் கெடுதல் ஆவயினான.

இதுவும், அக் குற்றுகர வீற்றுட் சிலவற்றிற்கு முடிபு கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) யாது என் இறுதியும் - யாது என வரும் குற்றுகர ஈறும், சுட்டு முதலாகிய ஆய்த இறுதியும் - சுட்டெழுத்தினை முதலாகவுடைய ஆய்தத்தொடர் மொழிக் குற்றுகர ஈறும், அன் ஒடு சிவணும் - அன்சாரியையொடு பொருந்தும்; ஆ வயினான ஆய்தம் கெடுதல் - அவ்விடத்து ஆய்தம் கெடுக.

எ - டு: யாதனை, யாதனொடு; அதனை, அதனொடு; இதனை, இதனொடு; உதனை, உதனொடு என ஒட்டுக.

(28)