3. முற்றுகர குற்றுகர ஈறுகள்

குற்றுகர ஈற்றுத் திசைப்பெயர் ஏழனுருபிற் சாரியை பெறாமலும் வருதல்

202.ஏழன் உருபிற்குத் திசைப்பெயர் முன்னர்ச்
சாரியைக் கிளவி இயற்கையு மாகும்
ஆவயின் இறுதி மெய்யொடுங் கெடுமே.

இதுவும், குற்றுகரவீற்றுட் சிலவற்றிற்கு ஏழாம் உருபோடு கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) ஏழன் உருபிற்கு - ஏழாம் வேற்றுமைக்கு, திசைப் பெயர் முன்னர் - திசையை உணரநின்ற பெயர்களின் முன்னர், சாரியைக்கிளவி இயற்கையும் ஆகும் - இவ்வீற்றிற்கு முன் கூறிய இன்சாரியையாகிய சொல் நின்று முடிதலேயன்றி நில்லாது இயல்பாயும் முடியும்; ஆ வயின் இறுதி மெய்யொடும் கெடும் - இயல்பாயவழிப் பெயர் இறுதிக் குற்றுகரம் தன்னால் ஊரப்பட்ட மெய்யொடும் கெடும்.

எ - டு: வடக்கின்கண், கிழக்கின்கண், தெற்கின்கண், மேற்கின்கண் எனவும்; வடக்கண், கிழக்கண், தெற்கண், மேற்கண் எனவும் வரும்.

உருபு முற்கூறியவதனால், கீழ்சார், கீழ்புடை; மேல்சார், மேல்புடை; தென்சார், தென்புடை; வடசார், வடபுடை என இவ்வாறு சாரியை பெறாது திரிந்து முடிவனவெல்லாம் கொள்க.1

(29)

1.இன்னும் இதனானே கீழைக்குளம், மேலைக்குளம், கீழைச்சேரி மேலைச்சேரி என ஐகாரம் பெறுதலும் கொள்க.(நச்.)