இஃது, இவ்வோத்திற்கெல்லாம் புறனடை கூறுதல் நுதலிற்று. (இ-ள்) புள்ளி இறுதியும் உயிர் இறு கிளவியும் சொல்லிய அல்ல ஏனைய எல்லாம்- புள்ளியீற்றுச் சொல்லும் உயிரீற்றுச் சொல்லுமென முடிபு சொல்லியவை அல்லாத ஒழிந்தவையெல்லாம்; தேரும் காலை- ஆராயுங்காலத்து, உருபொடு சிவணி சாரியை நிலையும் கடப்பாடு இல- உருபுகளொடு பொருந்தி இன் சாரியை நின்று முடியும் முறைமையை யுடையவல்ல (நின்றும் நில்லாதும் முடியும்.) புள்ளியீற்றுள் ஒழிந்தன ஐந்து; உயிரீற்றுள் ஒழிந்தது ஒன்று.1 இவையும் எடுத்தோதிய ஈற்றுள் ஒழிந்தனவுமெல்லா, ஈண்டுக் கொள்ளப்படும். எ - டு: மண்ணினை, மண்ணை; வேயினை, வேயை; நாரினை, நாரை; கல்லினை, கல்லை; முள்ளினை, முள்ளை எனவும் கிளியினை, கிளியை எனவும்; பொன்னினை பொன்னை எனவும்; தாழினை தாழை,தீயினை தீயை; கழையினை, கழையை எனவும் ஒட்டுக. புள்ளியீற்றுள் ஒழிந்தன பலவாகலின், அது முற்கூறப்பட்டது. `தேருங்காலை' என்றதனான், உருபுகள் நிலைமொழியாக நின்று தம் பொருளோடு புணரும் வழி முடியும் முடிபு வேற்றுமையெல்லாம் கொள்க. மண்ணிணைக் கொணர்ந்தான், நம்பியைக் கொணர்ந்தா கொற்றனைக் கொணர்ந்தான்.மலையொடு பொருது மரத்தாற் புடைத்தான்; மரத்துக்குப் போனான்; காக்கையிற் கரிது; காக்கையது பலி; மரத்துக்கண் கட்டினான் எனவும் ஒட்டுக. இஃது உருபியலாகலின் `உருபொடு சிவணி' என வேண்டா வன்றே. அதனான் உருபு புணர்ச்சிக்கண் சென்ற சாரியைகளெல்லாம் ஈற்றுப்பொது முடிபு உள் வழிப் பொருட்புணர்ச்சிக்கண்ணும் செல்லுமென்பது கொள்க. இன்னும் அதனானே , உயிரீறும் மெய்யீறும் சாரியை பெறாது இயல்பாய் முடிவன கொள்க. நம்பியை, கொற்றனை என வரும். (30) ஆறாவது உருபியல் முற்றிற்று.
1.கூறாத புள்ளியீறுகள் ஐந்து. அவை ணகர யகர ரகர லகர ளகரங்களாம். உயீரீற்றுள் ஒழிந்தது. இகரம் ஒன்றுமே. (நச்)
|