7. உயிர் மயங்கியல்

உயிரீறுகளின் புணர்ச்சியிலக்கணம் உணர்த்துவது.

இவ்வோத்து என்ன பெயர்த்தோவெனின், உயிரீறு வன்கணத்தொடும் சிறுபான்மை பிறகணத்தொடும் மயங்கிப் புணரும் இயல்பு உணர்த்தலின் உயிர்மயங்கியல் என்னும் பெயர்த்து. மேல் உருபு புணர்ச்சி கூறி ஈண்டுப் பொருட்புணர்ச்சி கூறுகின்றமையின், மேலதனோடு இயைபுடைத்தாயிற்று.

1. அகர ஈறு

அல்வழியில் அகர ஈற்றுப்பெயர் புணருமாறு

204.அகர இறுதிப் பெயர்நிலை முன்னர்
வேற்றுமை யல்வழிக் க ச த ப த் தோன்றின்
தத்தம் ஒத்த ஒற்றிடை மிகுமே.

இத்தலைச்சூத்திரம் என் நுதலிற்றோவெனின், அகரவீற்றுப் பெயர்க்கு வன்கணத்தோடு அல்வழி முடிபு கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) அகர இறுதிப் பெயர்நிலை முன்னர்- அகரமாகிய இறுதியுடைய பெயர்ச்சொல் முன்னர், வேற்றுமை அல்வழிக் க ச த பத் தோன்றின் - வேற்றுமையல்லாத அல்வழிக்கண் க ச த ப முதல் மொழி வருமொழியாய்த்தோன்றின், தம் தம் ஒத்த ஒற்று இடைமிகும்- தத்தமக்குப் பொருந்தின அக் க ச த பக்களாகிய ஒற்று இடைக்கண் மிகும்.

எ - டு: விளக்குறிது, மகக்குறிது; சிறிது, தீது, பெரிது என வரும்.

`ஒத்த' ஒற்றென்னாது `தத்தம்' என்றதனான், அகரவீற்று உரிச்சொல் வல்லெழுத்துமிக்கும் மெல்லெழுத்துமிக்கும் முடியும் முடிபும் இடைச் சொற்களுள் எடுத்தோதாதவற்றின் முடிவும்.1 அகரம் தன்னை உணரநின்றவழி முடியும் முடிபும் கொள்க.

தடக்கை, தவக்கொண்டான் என இவை உரிச்சொல் வல்லெழுத்துப்பேறு, தவஞ்செவி,தடந்தோள் என இவை மெல்லெழுத்துப்பேறு, "மடவ மன்ற தடவுநிலைக் கொன்றை" என்பது இடைச்சொல் முடிபு அக் குறிது , சிறிது, தீது,பெரிது என்பது தன்னை உணர நின்றவழி வல்லெழுத்து மிகுதி ,அவ்யாது என்பதும் இடையெழுத்து மிகுதி, அவ்வழகிது என்பதற்கு உயிர்க்கணத்து முடிபு.

(1)

1.இனி, இடைச்சொல் வல்லொற்றுப் பெற்று வருவன உளவேல் அவற்றையும் அவ்விலேசினான் முடித்துக்கொள்க. (நச்சி.)