1. அகர ஈறு

அகர ஈற்று வினைச்சொல்லும் இடைச்சொல்லும்

205.வினையெஞ்சு கிளவியும் உவமக் கிளவியும்
எனவென் எச்சமும் சுட்டின் இறுதியும்
ஆங்க என்னும் உரையசைக் கிளவியும்
ஞாங்கர்க் கிளந்த வல்லெழுத்து மிகுமே.

இஃது, அகர ஈற்று வினைச்சொல் முடிபும் இடைச்சொல் முடிபும் கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) வினையெஞ்சு கிளவியும் உவமக் கிளவியும்-அகர வீற்று வினையெச்சமாகிய சொல்லும் உவமச்சொல்லும், என என் எச்சமும் சுட்டின் இறுதியும்- என என்று சொல்ல வருகின்ற எச்சச் சொல்லும் சுட்டாகிய அகர வீறும், ஆங்க என்னும் உரையசைக்கிளவியும்- ஆங்க என்று சொல்லப்படும் உரையசையாகிய சொல்லும் ஞாங்கர்க் கிளந்த வல்லெழுத்து மிகும்- மேலைச்சூத்திரத்துச் சொன்ன வல்லெழுத்து மிக்கு முடியும்.

எ - டு: உணக்கொண்டான், தினக்கொண்டான் ; சென்றான், தந்தான், போயினான் என்பன வினையெச்சம். மேலனவெல்லாம் இடைச்சொல். புலிபோலக்கொன்றான் என்பது உவமம். கொள்ளெனக்கொண்டான் என்பது என என் எச்சம், அக்கொற்றன், சாத்தன், தேவன், பூதன் என்பன சுட்டின் இறுதி. ஆங்கக் கொண்டான் என்பது உரையசைக்கிளவி.

(2)