1. அகர ஈறு

சுட்டின் முன் ஞ ந ம மெய்

206.சுட்டின் முன்னர் ஞ ந ம த் தோன்றின்
ஒட்டிய ஒற்றிடை மிகுதல் வேண்டும்.

இஃது, அகரச்சுட்டு மென்கணத்தொடு முடியுமாறு கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) சுட்டின் முன்னர் ஞ ந ம தோன்றின் - அகரச்சுட்டின் முன்னர் ஞ ந ம க்கள் முதலாகிய மொழி வருமொழியாய்த் தோன்றின், ஒட்டிய ஒற்று இடைமிகுதல் வேண்டும்- தத்தமக்குப் பொருந்திய ஒற்று இடைக்கண்ணே மிகுதல் வேண்டும்.

எ - டு: அஞ்ஞாலம், நூல், மணி என வரும்.

(3)