1. அகர ஈறு

`சாவ' என்னுஞ் சொல்

210.சாவ என்னுஞ் செயவென் எச்சத்து
இறுதி வகரங் கெடுதலும் உரித்தே.

இஃது, மேல் "வினையெஞ்சு கிளவியும்" (உயிர்மயங்கியல் - 2) என்ற முடிபிற்கு எய்தாது எய்துவித்தல் நுதலிற்று.

(இ-ள்) சாவ என்னும் செய என் எச்சத்து இறுதி வகரம் கெடுதலும் உரித்து - சாவ என்று சொல்லப்படும் செய என் எச்சத்து இறுதிக்கண் அகரமும் அதனாற் பற்றப்பட்ட வகர வொற்றும் கெடாது நிற்றலேயன்றிக் கெட்டு முடிதலும் உரித்து.

எ - டு: சாக்குத்தினான், சீறினான், தகர்த்தான், புடைத்தான் என வரும்.

இதனை, "வினையெஞ்சு கிளவியும்" (உயிர் மயங்கியல் - 2) என்றதன்பின் வையாத முறையன்றிய கூற்றினான், இயல்பு கணத்தும் அந் நிலைமொழிக்கேடு கொள்க, சாஞான்றார் என வரும்.

(7)