இஃது, அகரவீற்றுள் ஒருசார் பெயர்க்கும் வினைக்கும் இடைக்கும் முன் எய்தியது விலக்கியும் எய்தாதது எய்துவித்தும் முடிபு கூறுதல் நுதலிற்று. அன்னவென்பதும் செய்யியவென்பதும் பலவற்றிறுதிப் பெயர்க்கொடை யென்பதும் எய்தியது விலக்கின. மற்றையன எய்தாதது எய்துவித்தன. (இ-ள்) அன்ன என்னும் உவமக்கிளவியும் - அன்ன என்று சொல்லப்படும் உவம உருபாகிய இடைச்சொல்லும், அண்மை சுட்டிய விளிநிலைக் கிளவியும் - அணியாரைக் கருதிய விளியாகிய நிலைமையையுடைய உயர்திணைப் பெயர்ச்சொல்லும், செய்ம்மன என்னும் தொழில் இறு சொல்லும் - செய்ம்மன என்று சொல்லப்படும் வினைச்சொல்லாகிய அகரவீற்றுச் சொல்லும், ஏவல் கண்ணிய வியங்கோள் கிளவியும் - ஏவலைக் கருதிய வியங்கோளாகிய வினைச்சொல்லும், செய்த என்னும் பெயரெஞ்சு கிளவியும். செய்த என்று சொல்லப்படும் பெயரெச்சமாகிய வினைச்சொல்லும், செய்யிய என்னும் வினை எஞ்சு கிளவியும் - செய்யிய என்று சொல்லப்படும் வினையெச்சமாகிய வினைச்சொல்லும், அம்ம என்னும் உரைப்பொருள் கிளவியும் - அம்ம என்று சொல்லப்படும் உரையசைப் பொருண்மையையுடைய இடைச்சொல்லும், பலவற்று இறுதிப்பெயர்க்கொடை உளப்பட அன்றி அனைத்தும் - பன்மைப்பொருள்களின் அகர வீற்றுப் பலவென்னும் பெயர்ச்சொல்லுமாகிய அவ்வனைத்துச் சொல்லும், இயல்பு என மொழிப - இயல்பாய் முடியுமென்று சொல்லுவர். (ஆசிரியர்.) எ - டு: பொன் அன்ன குதிரை, செந்நாய், தகர், பன்றி, எனவும்; ஊர கொள், செல், தா, போ எனவும்; உண்மன குதிரை, செந்நாய், தகர், பன்றி எனவும்; செல்க குதிரை, செந்நாய், தகர் பன்றி எனவும்; உண்ட குதிரை, செந்நாய், தகர், பன்றி எனவும்; இதன் எதிர்மறை: உண்ணாத குதிரை எனவும்; இதன் குறிப்பு நல்ல குதிரை, செந்நாய் எனவும்; உண்ணிய கொண்டான், சென்றான், தந்தான், போயினான் எனவும்; அம்ம கொற்றா, சாத்தா, தேவா, பூதா எனவும்; பலகுதிரை, செந்நாய், தகர், பன்றி எனவும் வரும். `ஊரகொள்' என்பது உயிரீறாகிய உயர்திணைப் பெயர் என்பதனுள் அடங்காதோவெனின், ஊரன் என்பது ஊர என ஈறு திரிந்தமையின் ஆண்டு அடங்காதாயிற் றென்பது. விளிநிலைக்கிளவியாகிய பெயரை முன்வைத்ததனால், செய்த வென்பதன் மறையன்றிச் செய்யும் என்பதற்கு மறையாகிய செய்யாத என்பதும் அவ்வியல்பு உடைத்தெனக்கொள்க. அது வாராத கொற்றன் என வரும். `உரையிற்கோடல்' என்பதனால், வியங்கோள் முன் வைக்கற் பாலதனை முன்வையாது செய்ம்மன என்பதனை முன்வைத்ததனான், இவ் வியல்பு முடிபின்கண் செய்ம்மன என்பது சிறப்புடைத்தெனப் பெறப் பட்டது. அதனால், `ஏவல்கண்ணாத வியங்கோளும்'1 இவ்வியல்பு முடிபு உடைத்தெனக் கொள்க. அது, "மன்னிய பெரும நீ" (புறம் 6) என வரும். `பலவற்றிறுதிப் பெயர்க்கொடை' என்பதனை அம்ம என்பதற்கு முன் வையாததனால், பல என்பது மேற்கூறும் செய்யுள் முடிபில் திரிந்து முடிதல் ஈண்டை இயற்பிற் சிறப்பிற்றென்பதூஉம், அகரவீற்றின் முடிபுகூறாத முற்று வினையும் வினைக்குறிப்பும் அவ்வியல்பின வென்பதூஉம் பெறப்படும். உண்டன குதிரை என்பது முற்றுவினை, கரியகுதிரை என்பது முற்றுவினைக் குறிப்பு. "தன்னின முடித்தல்" (பொருள் 199 உரை) என்பதனால், பல என்பதின் இனமாகிய சில என்பதற்கும் அவ்வியல்பு கொள்க. சில குதிரை என வரும். (8) 1.மாறுபாடு: கூறுகின்றான் அவன் நிலைபெற்றிருத்தல் வேண்டுமென்றே கருதிக் கூறுதலின் அதுவும் ஏவல் கண்ணிற்றேயாம். (நச்.)
|