1. அகர ஈறு

`வாழிய' என்னும் சொல்

212.வாழிய வென்னுஞ் சேயென்1 கிளவி
இறுதி யகரங் கெடுதலும் உரித்தே.

இஃது, ஏவல்கண்ணாக வியங்கோட்களில் ஒன்றற்கு எய்திய இயல்பு விலக்கி விகாரம் கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) வாழிய என்னும் சேய் என் கிளவி- வாழிய என்று சொல்லப்படுகின்ற அவ்வாழுங்காலம் அண்மையவன்றிச் சேய்மைய என்று உணர்த்தும் சொல், இறுதி யகரம் கெடுதலும் உரித்து - தன்னிறுதிக்கண் அகரமும் அதனாற் பற்றப்பட்ட யகரவொற்றும் கெடாது முடிதலேயன்றிக் கெட்டு முடிதலும் உரித்து.

எ - டு: வாழிகொற்றா என வரும்.

`சேயென் கிளவி' என்றதனான், அம் முடிபு இவ் ` வாழிய ' என்பதற்கு ஏவல் கண்ணாத நிலையதென்பது விளக்கி நின்றது. "ஒன்றென முடித்தல்" (பொரு-999 உரை) என்பதனால், பிற கணத்துக் கண்ணும் இவ் விதி கொள்க. வாழிஞெள்ளா என வரும்.

(9)