1. அகர ஈறு

`பல' என்னுஞ்சொல்

214.பலவற் றிறுதி நீடுமொழி உளவே
செய்யுள் கண்ணிய தொடர்மொழி யான,

இஃது, மேற் "பலவற்றிறுதிப் பெயர்க்கொடை" (உயிர் மயங்கியல்:8) என்று ஓதியதற்குச் செய்யுள் முடிபு கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) பலவற்று இறுதி நீடும் மொழி உள - பல என்னும் சொல்லின் இறுதி அகரம் நீண்டு முடியும் மொழிகளும் உள ; (யாண்டு உளவெனில்) செய்யுள் கண்ணிய தொடர்மொழியான- செய்யுளாதலைக் கருதிய ஒன்றோடொன்று தொடர்ச்சிப் படும் செய்யுள் முடிபுடைய மொழிகளின்கண்ணே.

`செய்யுள் கண்ணியமொழி' என்னாது தொடர்மொழி, என்றதனான், இப் பலவென்பது நீளும்வழி வருமொழியாவது சிலவென்பதே என்று கொள்ளப்படும். `செய்யு ளான' என்னாது `செய்யுள் கண்ணிய தொடர்மொழி யான' என்றதனால் , பல என்னும் மொழியீறு நீண்ட வழி நிலைமொழி அகரப்பேறும் வருமொழி ஞகார மெல்லெழுத்துப் பேறும், வருமொழியீறு நீண்ட வழி அகரப்பேறும் மகரமாகிய மெல்லெழுத்துப் பேறும் கொள்க. `உண்டு' என்னாது ` உள' என்றதனால், சிலவென்னும் வருமொழியிறுதி நீடலும் கொள்க.

எ - டு: "பலா அஞ் சிலாஅ மென்மனார் புலவர்" என வரும். இதன் சொல்நிலை பலசில என்னும் செவ்வெண்.1

(11)

1. செவ்வெண்-எண்ணும்மை தொக்கு வருவது. (பாவாணர்.)