1. அகர ஈறு

`பல' `சில' என்னுஞ் சொற்கள்

215.தொடரல் இறுதி தம்முன் தாம்வரின்
லகரம் றகரவொற் றாதலு1 முரித்தே.

இஃது, பல சில என்பவற்றிற்கு இயல்பேயன்றித் திரிபும் உண்டென எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) தொடரல் இறுதி தம்முன் தாம்வரின்-தொடர் மொழியல்லாத ஈரெழுத்தொருமொழியாகிய பல சில என்னும் அகரவீற்றுச் சொல் தம்முன்னே தாம் வரின், லகரம் றகர ஒற்று ஆதலும் உரித்து - தம் ஈற்றில் நின்ற லகரவொற்று றகர வொற்றாய்த் திரித்து முடிதலும் உரித்து.

எ - டு:பற்பல கொண்டான் எனவும், சிற்சில வித்தி எனவும் வரும்.

`தன்முற்றான்' என ஒருமையாற் கூறாது `தம்முன் தாம்வரின்' என்ற பன்மையான், மேல் பல சில என நின்ற இரண்டும் தழுவப் பட்டன. `தொடரலிறுதி தம் முன்வரின்' என்னாது `தாம்' என்றதனான். இம் முடிவின்கண் பலவென்பதன்முன் பலவருக சிலவென்பதன்முன் சில வருக என்பது கொள்ளப்பட்டது.

`லகரம் றகரமாம்` என்னாது `லகரம் றகரவொற்றாம்' என்ற ஞாபகத்தான், அகரம் கெடுமென்றானாகக் கொள்க. அருத்தாபத்தி முகத்தால் , தம்முன் தாம்வரின் லகரம் றகரவொற்றா மெனவே , தம் முன் பிற வந்தவிடத்து லகரம் றகரவொற்றாகாது அகரம் கெடுமென்பது கொள்ளப்படும். பல்படை, பல்யானை, சில்படை, சில்வேள்வி என வரும்.

`தொடரலிறுதி' என்பது சுட்டல்லது ஓரெழுத்தொருமொழி அகரமின்மையின், ஓரெழுத்தொருமொழிமேற் செல்லாதாயிற்று, உரித்தென்றது, அகரவீற்றொருமை பற்றி.

(12)

1. (பாடம்) றாகலு. (நச்.)