1. அகர ஈறு

அவற்றிற்கு மேலும் ஒரு முடிபு

216.வல்லெழுத் தியற்கை உறழத் தோன்றும்.

இதுவும், மேற்கூறிய இரண்டிற்கும் இன்னும் ஓர் முடிபு வேற்றுமை உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்) வல் எழுத்து இயற்கை உறழத்தோன்றும்-மேற்கூறிய பலசில என்னும் இரண்டிற்கும் அகரவீற்றுப் பொதுவிதியிற் கூறிய வல்லெழுத்து மிகுதியது இயல்பு மிகுதலும் மிகாமையுமாகி உறழ்ந்துவரத் தோன்றும்.

எ - டு: பலப்பல, சிலச்சில, பலபல, சிலசில என வரும்.

ஈண்டும் தம்முற்றாம் வருதல் கொள்க. `இயற்கை' என்றதனான் முன் கூறிய பற்பல, சிற்சில என்னும் முடிபோடு பல்பல, சில்சில என்னும் முடிபுபெற்று உறழ்ச்சியாதல் கொள்க.

`தோன்றும்' என்றதனான், அகரம் கெட லகரம் ஆய்தமும் மெல்லெழுத்துமாய்த் திரிந்து முடிதல் கொள்க.

எ - டு: பஃறானை, பன்மரம், சிஃறாழிசை, சின்னூல் என வரும்.

(13)