1. அகர ஈறு

வேற்றுமையில் அகர ஈறு

217.வேற்றுமைக் கண்ணும் அதனோ ரற்றே.

இஃது, அகர ஈற்றுப்பெயர்க்கு வன்கணத்தொடு வேற்றுமை முடிபு நுதலிற்று.

(இ-ள்) வேற்றுமைக்கண்ணும் அதன் ஓர் அற்று - அகர வீற்றுப்பெயர் வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக் கண்ணும் மேற்கூறிய அல்வழியோடு ஒருதன்மைத்தாய்க் கசதப முதல் மொழி வந்தவழி தத்தம் ஒற்று இடைமிக்கு முடியும்.

எ - டு: இருவிளக்கொற்றன், சாத்தன் , தேவன், பூதன் என வரும். விளக்குறுமை எனக் குணவேற்றுமைக்கண்ணும் கொள்க. (இருவிள ஓலை; வேணாட்டகத்து ஓர் ஊர்)1

(14)

1. கருவூரினகத்து ஒரு சேரியுமென்ப. இருவிளவிற் கொற்றன் என விரிக்க. (நச்.)