1. அகர ஈறு

மக என்னும் பெயர்

219.மகப்பெயர்க் கிளவிக்கு இன்னே சாரியை.

இஃது, அவ்வீற்றுள் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தல் நுதலிற்று.

(இ-ள்) மகப்பெயர்க் கிளவிக்கு இன்சாரியை-அகரவீற்று மக என்னும் பெயர்ச்சொல்லிற்கு வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண் வரும் சாரியை இன்.

எ - டு: மகவின்கை; செவி, தலை, புறம் என வரும்.

சாரியைப்பேறு வரையாது கூறியவழி நான்கு கணத்துக் கண்ணும் செல்லுமென்பதாகலின், மகவின்ஞாண் என இயல்பு கணத்துக்கண்ணும் கொள்க.

(16)