நூன்மரபு

5. மயக்கம்

மெய் மயங்குமாறு

22.அம்மூ வாறும் வழங்கியன் மருங்கின்
மெய்ம்மயக் குடனிலை தெரியுங் காலை.

இஃது, தனிமெய்ம் மயக்கத்திற்குப் பெயரும் முறையும் தொகையும் உணர்த்துதல் நுதலிற்று.

அ மூ ஆறும் - மேற்சொல்லப்பட்ட (மூவாறு) பதினெட்டு மெய்யும் , வழங்கு இயல் மருங்கின் - தம்மை மொழிப்படுத்தி வழங்குதல் உளதாமிடத்து , மெய் மயக்கு - மெய்ம் மயக்கம் என்றும் , உடன்நிலை - உடனிலை மயக்கம் என்றும் இருவகைய , தெரியும் காலை - (அவை மயங்கு முறைமை) ஆராயும் காலத்து.

உயிர் , மெய் , உயிர்மெய் என்னும் மூன்றனையும் உறழ்ச்சிவகையான் உறழ ஒன்பது உளவாமன்றே , அவற்றுள் தனிமெய்யோடு தனி மெய்ம் மயக்கம் ஒன்றே கூறிய தென்னெனின, மற்றவற்றிற்கு வரையறை யின்மையின் வரையறையுடைய தனிமெய்ம் மயக்கமே கூறியொழிந்தார் என உணர்க. மெய் என்றதனால் , தனிமெய்யோடு உயிர்மெய்ம் மயக்கமன்றி, தனிமெய்யோடு தனி மெய்ம்மயக்கமாதல் கொள்க.

(22)