1. அகர ஈறு

மக என்னும் பெயர்

220.அத்தவண் வரினும் வரைநிலை இன்றே.

இதுவும் அது.

(இ-ள்) அத்து அவண் வரினும் வரை நிலை இன்று- மேற்கூறிய இன்னேயன்றி அத்து என்னும் சாரியை இயைபு வல்லெழுத்தினோடு அம் மக என்னும் சொல்லிடத்து வந்து முடியினும் நீக்கும் நிலைமை இன்று.

எ - டு: மகத்துக்கை; செவி, தலை, புறம் எனச் செய்கை அறிந்து முடிக்க.

`அவண்' என்றதனால், மகப்பால்யாடு என வல்லெழுத்துப் பேறும், மகவின்கை என மேல் இன்சாரியை பெற்றவழி இயைபு வல்லெழுத்து வீழ்வும், உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கண் வந்தவழி விளவின்கோடு என இயைபு வல்லெழுத்து வீழ்வும் கொள்க. `நிலை' என்றதனால், மகம்பால்யாடு என மெல்லெழுத்துப்பேறும் கொள்க.

(17)