2. ஆகார ஈறு

உம்மைத் தொகை முடிபு

224.உம்மை எஞ்சிய இருபெயர்த் தொகைமொழி
மெய்ம்மை யாக அகரம் மிகுமே.

இஃது, அவ்வீற்று அவ்வழிக்கண் உம்மைத் தொகை முடிபு கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) உம்மை எஞ்சிய இருபெயர்த் தொகைமொழி-உம்மைதொக்க இருபெயராகிய தொகைச்சொல், மெய்ம்மையாக அகரம் மிகும்-மெய்யாக நிலைமொழியீற்று அகரம் மிக்கு முடியும்.

எ - டு: உவா அப் பதினான்கு.

`மெய்ம்மையாக' என்றதனால் வல்லெழுத்துக் கொடுக்க. `உம்மை தொக்க' என்னாது `எஞ்சிய' என்ற வாய்பாட்டு வேற்றுமையான். இம் முடிபு இருபெயரொட்டுப் பண்புத் தொகைக்கும் கொள்க. அராஅப்பாம்பு என வரும்.

இன்னும் அதனான், எழுவாய் முடிபிற்கும் பெயரெச்சத்திற்கும் அகரப்பேறு கொள்க. இரா அக்கொடிது, இரா அக்காக்கை என வரும்.

நிலைமொழி எழுத்துப்பேறு வருமொழி வரையாது கூறின வழி நான்கு கணத்துக்கண்ணும் செல்லுமாகலின், இயல்பு கணத்துக் கண்ணும் அகரப்பேறு கொள்க. இறாஅ, வழுதுணங்காய் என வரும்.

(21)