2. ஆகார ஈறு

இயல்பாகும் ஆகார ஈற்றுச் சொற்கள்

225.ஆவு மாவும் விளிப்பெயர்க் கிளவியும்
யாவென் வினாவும் பலவற் றிறுதியும்
ஏவல்குறித்த உரையசை மியாவும்
தன்தொழில் உரைக்கும் வினாவின் கிளவியோ
டன்றி அனைத்தும் இயல்பென மொழிப.

இஃது, அவ்வீற்றிற் சிலவற்றிற்கு இயல்புகூறி எய்தியது விலக்குதலும் எய்தாதது எய்துவித்தலும் நுதலிற்று.

(இ-ள்) ஆவும் மாவும் விளிப்பெயர்க்கிளவியும்- ஆ என்னும் பெயர்ச்சொல்லும் மா என்னும் பெயர்ச்சொல்லும் விளித்தலையுடைய பெயராகிய உயர்திணைச்சொல்லும், யா என் வினாவும் பலவற்று இறுதியும்-யா என்னும் வினாப்பெயரும் அஃறிணைப்பன்மைப்பொருளை உணர்த்தும் ஆகாரவீற்று முற்று வினைச்சொல்லும், ஏவல் குறித்த உரையசைமியாவும்-முன்னிலையில் ஏவல் வினைச்சொல்லைக் குறித்துவரும் உரையசையாகிய மியா என்னும் ஆகாரவீற்று இடைச்சொல்லும், தன் தொழில் உரைக்கும் வினாவின் கிளவியொடு அன்றி அனைத்தும்- தனது தொழிலினைச் சொல்லும் ஆகார வினாவினையுடைய வினைச்சொல்லுமாகிய அவ்வனைத்தும், இயல்பு என மொழிப-இயல்பாய் முடியும் என்று சொல்லுவர் புலவர்.

எ - டு: ஆகுறிது, சிறிது, தீது, பெரிது எனவும்; மாகுறிது, சிறிது, தீது, பெரிது எனவும்; ஊராகொள், செல், தா, போ எனவும் வரும்; யாகுறிய, சிறிய, தீய, பெரிய எனவும்; உண்ணா குதிரை, செந்நாய், தகர், பன்றி எனவும்; கேண்மியாகொற்றா, சாத்தா, தேவா, பூதா எனவும்; உண்கா1 கொற்றா, சாத்தா, தேவா, பூதா எனவும் வரும்.

விளிப்பெயர்க் கிளவியும், பலவற்றிறுதியும், ஏவல்குறித்த உரையசை மியாவும், தன்றொழிலுரைக்கும் வினாவும் எய்தாதது எய்துவிக்கப்ட்டன. ஊரா கொள் என்பது உயிரீறாகிய உயர்திணைப் பெயரென்பதனுள் அடங்காதோ வெனின், முன் (உயிர் மயங்கியல்-8) கூறிற்றே கூறுக.

(22)

1. `உண்கா' என்பது யானுண்பேனோ என்னும் பொருட்டு (நச்.)